பதிவு செய்த நாள்
16
ஆக
2014
12:08
சாத்தூர்:இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று ஆடிகடைசி வெள்ளிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, அம்மன் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இக்கோயிலில் ஆக.,8ல் இத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்த பக்தர்கள் பொங்கலிட்டும், முடிகாணிக்கை செலுத்தியும்,நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.ஆடிகடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று அதிகாலையில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதன் பின்னர் கோயில் கருவறையில் அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. மாலை 3.30 மணிக்கு உற்சவமாரியம்மன் கோயிலில் இருந்து, சர்வ அலங்காரத்தில் ரிஷபவாகனத்தில் எழுந்தருளிய முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து, அர்ச்சுனாநதி, வைப்பாற்றில் இறங்கி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கோயிலுக்கு திரும்பி பக்தர்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டார்.பலர் கூழ்காய்ச்சி வழங்கினர். இருக்கன்குடி, பந்தல்குடி, மலேசியாவில் வசிக்கும் பக்தர்கள் சார்பில், ஜோதிடர் ராமச்சந்திரன் கோயில் மேடு பஸ்ஸ்டாண்டில், அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கினார். பக்தர்களுக்காக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் பரம்பரைஅறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி, செயல் அலுவலர் தனபாலன், பரம்பரை அறங்காவலர்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.