பதிவு செய்த நாள்
18
ஆக
2014
12:08
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, ஆவணி கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை வழிபட்டனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று, ஆவணி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு, மூலவருக்கு அதிகாலை, 4:30 மணிக்கு, பால், பன்னீர், இளநீர், விபூதி மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடத்தப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடிக்கிருத்திகையை அடுத்து வரும், முதல் கிருத்திகை என்பதால், சில பக்தர்கள் மொட்டை அடித்து மலர், மயில் மற்றும் அன்னக் காவடிகள் எடுத்து வந்து மூலவரை வழிபட்டனர்.நேற்று நடந்த கிருத்திகை விழாவில், 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், நீண்ட வரிசை யில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.