திருக்கோவிலூர் பெருமாள் கோவில் கோபுரங்கள் திருப்பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2014 02:08
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பெரிய ராஜகோபுரம் உள்ளிட்ட 6 கோபுரங்கள் திருப் பணிக்கான பாலாலய பூஜைகள் நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கோபுரங்கள்1000 ஆண்டுகள் பழமையானது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய ராஜகோபுரம் 192 அடியுடன் கம்பீரமாக உள்ளது. கடந்த 1991ம் ஆண்டு இந்த கோபுரம் பரனூர் கிருஷ்ணப்பிரேமி சுவாமிகளால் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி திருவிக்ரம சுவாமி மூலஸ்தானம் உள்ளிட்ட முக்கிய மூலஸ்தானங்கள் மட்டும் கும்பாபிஷேகம் செய்தனர். கோவில் கோபுரங்கள் திருப்பணி செய்வதற்கான ஆயத்த பணிகள் நடந்தது. கடந்த 21ம் தேதி இரவு பலத்த மழையில் பெரிய ராஜகோபுரத்தை மின்னல் தாக்கியது. நேற்று முன்தினம் மாலை மின்னல் தாக்கிய கிழக்கு பெரிய ராஜகோபுரம், கோவில் முகப்பு ராஜ கோபுரம், கொடிமரத்தை அடுத்துள்ள திருமங்கை மன்னன் கோபுரம், மேற்கு ராஜகோபுரம், கிளி கோபுரம் உள்ளிட்டவை திருப்பணி செய்வதற்கான பாலாலய பூஜைகள் துவங்கியது. வேணுகோபாலன் சன்னதியில் பகவத் அனுக்கை, ஹோமங்கள், கோபுர ஆவாகனம், பூர்ணாகுதி, பிரபந்தசேவை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு ஹோமங்கள், கோபுர பிரதிஷ்டை, சாற்றுமறை நடந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்றனர்.