பதிவு செய்த நாள்
28
ஆக
2014
01:08
ஒரத்துார்: பழமை வாய்ந்த ஒரத்துார் அகத்தீஸ்வரர் கோவிலை, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், சுவர்களில் மரச்செடிகள் முளைத்து, விரிசல் ஏற்பட்டு, சிதிலமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. படப்பையில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள ஒரத்துார் கிராமத்தில், இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் கருவறை துாங்காணை மாடவடிவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக, 35 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலங்களில் கிடைக்கும் வருவாய் மூலம் கோவிலில் உள்ள மூலவருக்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த கோவில் நிர்வாகம், குத்தகை பணத்தை முறையாக வசூலிக்காததால், கோவிலை நிர்வகிக்க முடியவில்லை.
மேலும், கோவிலை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததாலும், மரச்செடிகள் முளைத்து, கோவில் சுவர்கள் மற்றும் பிரகார சன்னிதிகளின் கட்டட ங்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுதவிர, கோவில் அருகே பழமை வாய்ந்த இரண்டு புனித குளங்கள் உள்ளன. இக்குளங்களில் ஒரு குளத்தை மட்டுமே ஊராட்சி நிர்வாகம் சமீபத்தில் சீரமைத்ததாக கூறப்படுகிறது. அருகே உள்ள மற்றொரு குளம் வேலிக்காத்தான் செடிகள் முளைத்து, புதர் மண்டி காணப்படுகிறது. எனவே, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கோவிலில் உள்ள முட்செடிகளை அகற்றி, குளத்தை துார் வாரி, முறையாக குத்தகை தெொகை வசூலித்து நிர்வாகிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.