பதிவு செய்த நாள்
28
ஆக
2014
01:08
கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் எஸ்.பி., ஜோஷி நிர்மல்குமார் முன்னிலையில், கலெக்டர் ஜெயந்தி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், கலெக்டர் ஜெயந்தி பேசியதாவது: தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா, செப்டம்பர், 7ம் தேதி நடக்கிறது. விழாவின் போது, கோவில் நிர்வாகத்தின் மூலம், தகரத்தால் ஆன பந்தல் அமைக்க வேண்டும். கோவிலைச் சுற்றி போதிய மின் விளக்குகள் அமைக்க வேண்டும். கோவிலுக்கு அருகில், அபிஷேகக் கடைகள் நடத்த அனுமதி வழங்கும் போது, பக்தர்களுக்கு இடையூறு இன்றியும், தீயணைப்பு வண்டிகள், போலீஸ் துறை வண்டிகள் சென்று வர ஏதுவாக, இடம் விட்டு அமைக்க வேண்டும். இதை கோவில் நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தனி நபர்களின் ஒலிபெருக்கியை அனுமதிக்கக் கூடாது. நகராட்சி நிர்வாகத்தின் மூலம், பக்தர்களின் வசதிக்காக, மலையைச் சுற்றி, ஆறு இடங்களில், குழாய் இணைப்பு மூலமாக, 24 மணி நேரமும் குடிநீர் வழங்க வேண்டும். கோவில் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்வதுடன் ஆண், பெண் என்று தனித்தனியாக கழிப்பறைகள், தண்ணீர் வசதியுடன் அமைத்து அவற்றை சுத்தம் செய்ய பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.
அரசு போக்குவரத்துக் கழகம் மூலம், செப்டம்பர், 5, 6, 7 ஆகிய தேதிகளில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். நகர பஸ்களில் கோவில் அருகில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது. பொதுசுகாதாரத்துறை மூலம், இரண்டு டாக்டர்கள் தலைமையில், குழு அமைக்கப்பட்டு மருத்துவ வாகனத்துடன், 24 மணி நேர பணியில், மூன்று நாட்கள் செயல்பட வேண்டும். போலீஸ் துறை மூலம், தேவையான போலீஸாரை பணியில் அமர்த்தி பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். மின்வாரியத்தின் மூலம், 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். விழாவிற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மின்விளக்குகளில் மின் இணைப்புகள் சரியாக உள்ளதா? என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். பக்தர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஜெயந்தி பேசினார். இக்கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அருணா, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, உதவி கமிஷனர் முல்லை, கரூர் நகராட்சி கமிஷனர் வரதராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.