பதிவு செய்த நாள்
28
ஆக
2014
01:08
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் இரவு முழுவதும் 40 கிராமங்களில் இருந்து வந்த 40குழுக்களில், 800 கலைஞர்கள் இடைவிடாமல், தேவராட்டம் ஆடி அய்யனார் சுவாமிக்கு காணிக்கை படைத்தனர்.
தேவராட்டக்கலை: தமிழ்நாட்டில் பாராம்பரிய கலைகளுள் தேவராட்டம்மும் ஒன்று. பாரம்பரிய கலைகள் "கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக நாகரீக உலகில் மறைந்து மங்கி வருகிறது. பாரம்பரிய கலைஞர்கள் வருமானம் இன்றி தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.கோவில்பட்டி பகுதியில் இன்றும் தேவராட்டக்கலைஞர்களை பயிற்சி கொடுத்து வளர்த்து, கோயில் திருவிழாவில் பங்கேற்று வருகின்றனர்.
40 பயிற்சி பெற்ற குழுக்கள் : மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் அய்யனார் சுவாமி கோயில் உள்ளது. இந்த கிராமத்தில் கம்பளத்துநாயக்கர் இன மக்கள் தங்களது பாரம்பரிய கலையான தேவராட்டத்தின் மூலம் குல தெய்வ வழிபாடு செய்து வருகின்றனர். இந்த விழாவில் சுற்றிலும் உள்ள ஜமீன் கோடாங்கிபட்டி, எத்திலப்பநாயக்கன்பட்டி,கம்பளத்து நாயக்கன்பட்டி, தேரிலோவன்பட்டி உட்பட 40 கிராமங்களில் ஆறு வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண், பெண் ஆகியோருக்கு தேவராட்டப்பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும், 20 பேர் கொண்ட ஒரு குழு வீதம் மொத்தம் 40 குழுக்கள் மஞ்சநாயக்கன்பட்டி அய்யனார் கோவில் திருவிழாவில் பங்கேற்றனர்.
இரவு முழுவதும் ஆட்டம்: தேவர்களால் ஆடப்பட்ட இந்த தேவராட்டத்தில் 72 அடவிகள்(ஸ்டெப்) உள்ளன. அய்யனார் கோயில் முன்பாக திரண்ட 40 குழுக்களும் இரவு 10 மணி முதல் காலை ஆறு மணிவரை 30 அடவிகளில் தேவராட்டம் ஆடினர். காலில் சலங்கையும், தலையில் தலைப்பாகை கட்டியும், கைகளில் வண்ண துணிகள் வைத்தும் உறுமி இசைக்கு தகுந்தாற் போல் ஆடினர்.இந்த ஆட்டத்தை அய்யனார் சுவாமிக்கு சமர்ப்பிக்கும் விதமாக, காணிக்கையாக செலுத்தினர். தேவராட்டத்தை பார்க்க அருகில் இருந்த கிராம மக்கள் திரளாக கண்டு களித்தனர். முன்னதாக தேவராட்டத்தை விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா தர்மராஜ் செய்திருந்தார்.
தர்மராஜ் கூறியதாவது: எங்களது கம்பளத்து நாயக்கர் இனத்தில் பிறப்பு, இறப்பு, கோயில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் தேவராட்டம் ஆடாமல் துவக்குவதில்லை. ஆதி காலத்தில் இருந்தே முன்னோர்கள் இதனை பழக்கமாக கொண்டு வந்துள்ளனர். அதன் படி எங்களது இன மக்கள் உள்ள கிராமங்களில் 6 முதல் 60 வயது வரை உள்ள ஆண், பெண்களுக்கு தேவராட்டத்தில் பயிற்சி வழங்குவோம். அதில் சிறப்பாக உள்ளவர்களை குழுவில் சேர்த்துக் கொள்வோம். பாரம்பரிய கலைகள் அழிந்து வரும் நிலையில், இந்த தேவராட்டத்தை அடுத்த தலைøமுறைக்கு எடுத்து செல்கிறோம். தொடர்ந்து கோயில் திருவிழாவில் இரவு முழுவதும் சுவாமிக்கு தேவராட்டம் ஆடி காணிக்கையாக சமர்ப்பிக்கிறோம், என அவர் தெரிவித்தார்.