பதிவு செய்த நாள்
01
செப்
2014
12:09
திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள திருவாதிரைமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த சிவலோகநாதர் கோவில் உள்ளது. அறநிலைய துறைக்கு சொந்தமான இந்த கோவில் இடிந்த நிலையில் உள்ளதால், 25 லட்சம் மதிப்பில் திருப்பணி, நேற்று முன்தினம் துவங்கியது. அன்று இரவு, 7 மணிக்கு அம்மன் மண்டபம் பகுதியில் அஸ்திவார பணிக்காக, பள்ளம் தோண்டிய போது, இரண்டரை அடி உயரம் கொண்ட ஐம்பொன்னாலான நடராஜர் சிலை மற்றும் ஒன்றரை அடி உயரம் கொண்ட அம்மன் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. கோவில் திருப்பணியின் போது, கண்டெடுக்கப்பட்ட ஸ்வாமி சிலைகளை, தாசில்தார் நாகராஜன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதற்கு, பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அறநிலைய துறைக்கு சொந்தமான கோவிலில், கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அறநிலையதுறையிடம் தான் ஒப்படைக்க வேண்டும், என்று கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த இரண்டு சிலைகளையும் கோவில் செயல் அலுவலர் ராணி மற்றும் அலுவலர்கள், திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவில் வளாகத்தில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் வைத்தனர். மீட்கப்பட்ட நடராஜர் சிலையில் இருந்த திருவாட்சி மற்றும் இடதுபுறத்தில் இருந்த கை ஆகியவை உடைந்த நிலையில் இருந்தது. நேற்று காலை முதல் மாலை வரை, தேடிப்பார்த்தில், நடராஜர் சிலையிலிருந்து சேதமடைந்த திருவாட்சி மற்றும் இடது கை போன்றவை கண்டெடுக்கப்பட்டது. வேறு ஏதும் சிலைகள் கிடைக்கவில்லை.