பதிவு செய்த நாள்
01
செப்
2014
12:09
திருச்சி: திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று மாலை விநாயகர் சிலைகள், காவியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல் வேறு அமைப்புகள் சார்பில், திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், 176 இடங்களிலும், மாவட்டத்தில், 854 இடங்களிலும் விநாயகர் சிலை வைக்க, போலீஸார் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டிருந்த, விநாயகர் சிலைகளை, நேற்று, காவிரியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. திருச்சி மாநகர பகுதிகளில், நேற்று மதியம், 3 மணி முதல் போக்குவரத்து மாற்றப்பட்டது. சிலைகள் கரைக்கப்படும், காவிரியாற்று பாலத்தில், மூன்று நடமாடும் கழிவறை, மூன்று குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டது. காந்தி மார்கெட் முதல் காவிரி பாலம் வரை, 15 கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு, புறக்காவல் நிலையம் மூலம் போலீஸார் கண்காணித்தனர். நேற்று மாலை, 4 மணி முதல், பல்வேறு அமைப்பினர் தாரை தப்பட்டை முழங்க, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தி ஊர்வலமாக எடுத்துச் சென்று, காவிரியாற்றில் விசர்ஜனம் செய்தனர். விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப் படுவதையொட்டி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில், கூடுதல் கமிஷனர் பாலகிருஷ்ணன், மூன்று உதவி கமிஷனர்கள், 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 15 எஸ்.ஐ.,க்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.