பதிவு செய்த நாள்
03
செப்
2014
12:09
குன்னூர் : குன்னூர் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் உள்ள சங்கிலி முனீஸ்வரர் மற்றும் மதுரை வீரன் கோவிலில் 39வது ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவையொட்டி கடந்த 27ம் தேதி கொடியேற்றம், சிறப்பு பூஜை, நெய்வேத்தியங்களுடன் சாமி கட்டும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தன. இதில், செல்வகணபதி, சங்கிலிமுருகன், மதுரை வீரன், முத்தாலம்மன், முருகன் ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நேற்று காலை 10:30 மணியளவில் குன்னூர் தந்திமாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடங்களுடன் ஊர்வலம் துவங்கியது. மவுன்ட்ரோடு, டி.டி.கே., ரோடு வழியாக தாரை தப்பட்டை முழங்க ஐயப்பன் கோவில் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. மதியம் 1:00 மணியளவில் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் நடந்தது. இதில் மதுரை வீரன் வேடமணிந்து நடனமாடி, சென்றது பக்தர்களை பரவசப்படுத்தியது. இன்று காலை 10:45 மணிக்கு கரக திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து சக்தி கெடா வெட்டி, பொங்கல் வைத்து அபிஷேக ஆராதனை நடக்கிறது. நாளை 4:00 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் கங்கை சென்றடைதல், 7ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் இளைஞர் அணி, அனைத்து மகளிரணியினர் மேற்கொண்டுள்ளனர்.