வேலூர் மாவட்டம் வள்ளிமலை முருகன் கோயிலில், நான்கு நாள் தேரோட்டம் நடக்கிறது. முருகன், வள்ளியை யாருக்கும் தெரியாமல் கந்தர்வ மணம் செய்து கொண்ட இத்தலத்தில் முருகன், மலைக்கோயிலில் அருளுகிறார். மாசியில் நடக்கும் தேர்த் திருவிழாவில், மலையைச் சுற்றி தேர் இழுக்கப்படும். வள்ளி, மான் வயிற்றில் பிறந்த தலமாகக் கருதப்படும் சோமநாதபுரம் என்னும் இடத்தில், தேர் நிறுத்தப்படும்போது வேடுவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணான வள்ளிக்கு சீர் கொடுத்தும், முருகனுக்கு தேன், தினைமாவு படைத்தும் வரவேற்கும் வைபவமும் நடக்கும். நான்காவது நாள் தான் தேர் நிலைக்கு வரும்.