பதிவு செய்த நாள்
05
செப்
2014
12:09
கோவை : கோவை, மசக்காளிபாளையம் வீரமாட்சியம்மன், கன்னிமார் மற்றும் கருப்பராய சுவாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளானோர் பங்கேற்றனர். விழா கடந்த ௧ம் தேதி காலை, விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை திருப்பள்ளி எழுச்சி, அடியார்கள் வழிபாடு நடந்தது. மாலையில், விமான கலசங்கள் நிறுவுதல், திருச்சுற்று மூர்த்திகளுக்கு எண்வகை மருந்து சாத்துதல் நடந்தது.நேற்று காலை ௬.௦௦ மணிக்கு மங்கள இசை மற்றும் திருப்பள்ளி எழுச்சியும், ௬.௧௫ மணிக்கு மூர்த்திகளுக்கு காப்பு அணிவித்தலும் நடந்தன. ௬.௩௦ மணிக்கு நான்காம் கால வேள்வி ௧௦௮ வகையான காய், கனி, கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்கள் ஆகுதி, நாடி சந்தானம், நிறையாகுதி, பேரொளி வழிபாடு, மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் மற்றும் வேண்டுதல் விண்ணப்பம் ஆகியவை நடந்தன. காலை ௮.௦௦ மணிக்கு திருக்குடங்கள் கோவிலை வலம் வந்தன. ௮.௩௦ மணிக்கு விமான கலசத்துக்கும், தொடர்ந்து மூலமூர்த்திகளுக்கும் திருக்குட நன்னீராட்டை கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதினம் இளையபட்டம் மருதாசல அடிகளார் மற்றும் தென்சேரிமலை திருநாவுக்கரசர் திருமடம் முத்துசிவராமசாமி அடிகளார் ஆகியோர் நடத்தினர்.இதையடுத்து, ௧௦.௩௦ மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, மங்கள காட்சி, பேரொளி வழிபாடு நடந்தன. விழா மற்றும் அன்னதானத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று முதல் ௪௮ நாட்கள் ஏக மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் திருப்பணி கமிட்டியினர் செய்துள்ளனர்.