சூலுார் : குமரன் கோட்டம் சுவாமிநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 11ம்தேதி நடக்கிறது. கண்ணம்பாளையத்தில் உள்ள குமரன் கோட்டம் சுவாமிநாத சுவாமி கோவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, 2002ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 11ம்தேதி கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. 8ம்தேதி காலை 6.00 மணிக்கு கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. 33 ஹோம குண்டங்களில் ஆறு கால யாகம் நடக்கிறது. 11ம்தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் அறுபடை முருகனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, ஆன்மிக அருளாளர்கள் பங்கு பெறும் மகா சங்கமம் மற்றும் மலர் வெளியீட்டு விழா நடக்கிறது. பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், ஆனைகட்டி தயானந்த சரஸ்வதி சுவாமிகள், கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் விழா மலரை வெளியிடுகிறார்.