பதிவு செய்த நாள்
08
செப்
2014
01:09
அன்னுார் : அன்னுார் அருகே, 200 ஆண்டு பழமையான மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கானுார் புதுார், மாகாளியம்மன் கோவில் 200 ஆண்டு பழமையானது. இக்கோவில் வளாகத்தில், விநாயகர், வள்ளி தெய்வானை உடனமர் முருகன், துர்க்கையம்மன், தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்களும், நவகிரகங்களும் உள்ளன. கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன.இதையடுத்து, கும்பாபிஷேக விழா 5ம் தேதி கணபதி வேள்வியுடன் துவங்கியது.நேற்று அதிகாலையில் நான்காம் கால வேள்வி நடந்தது. காலை 7.45 மணிக்கு யாகசாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா அபிஷேகம், பேரொளி வழிபாடும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் இளைய பட்டம் மருதாசல அடிகள், திருப்புகழ் அரங்கசாமி, அவிநாசி காமாட்சிதாச சாமிகள் அருளுரை வழங்கினர். பேரூர், சாந்தலிங்கர் அருள்நெறி மன்றத்தினர் தமிழ்முறைப்படி வேள்வி வழிபாடுகளை செய்தனர்.