பதிவு செய்த நாள்
17
செப்
2014
01:09
ஓமலூர்: ஓமலூர் அருகே சின்னத்திருப்பதி, பிரசன்ன வெங்கட்டரமண ஸ்வாமி கோவிலில், புதியதாக தயாரிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் நடந்தது. ஓமலூர் அருகே, காருவள்ளியில், பிரசன்ன வெங்கட்டரமண கோவில் உள்ளது. இதை சின்னத்திருப்பதி என்றே அப்பகுதியினர் கூறுவது வழக்கம். கோவிலின் பழைய தேருக்கு பதிலாக, புதிய தேர் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையேற்று, புதிய தேர் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, இந்துசமய அறநிலையத்துறை சார்பில், 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பொதுமக்கள் பங்களிப்பாக ,10 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டு, மொத்தம் 39 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தேர் அமைக்கும் பணி ஆறு மாதமாக நடந்தது. இந்நிலையில், புதிய தேர் அமைக்கும் பணி நிறைவடைந்து, புதியத் தேருக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது. ஓமலூர், எம்.எல்.ஏ., பல்பாக்கி கிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, கோவில் ஆய்வாளர் கல்பனாதத் உட்பட பலர் கலந்துகொண்டு, புதிய தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.