நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் பணிகள் ஒன்றரை ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் கோபால் கூறினார். 2010 பிப்., 28-ல் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடந்தது. இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் திருப்பதி கோயில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக ஐந்தரை ஏக்கர் நிலத்தை விவேகானந்தா கேந்திரம் இலவசமாக வழங்கியது. திருப்பதி தேவசம்போர்டு 22.50 கோடி ரூபாய் ஒதுக்கியது. தற்போது அந்த இடத்துக்கு திருப்பதிபுரம் என்று பெயர் சூட்டப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.இந்த பணிகளை திருப்பதி தேவசம் செயல்அலுவலர் கோபால் தலைமையில் அர்ச்சகர் குருராஜராஜன் மற்றும் இன்ஜினியர்கள் நேற்று ஆய்வு செய்தனர். பின் அவர் கோயிலுக்கு முறையான அனுமதி பெற்று பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், ஒன்றரை ஆண்டுக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்தார்.