பதிவு செய்த நாள்
22
செப்
2014
11:09
திருப்பதி: திருப்பதியில், ஐந்து இடங்களில், அண்ணா கேன்டீன் துவங்க உள்ளதாக, திருப்பதி நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நடத்தப்படும், அம்மா உணவகம் போல், ஆந்திர மாநில அரசு, அக்., 2ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று, திருப்பதியில், அண்ணா கேன்டீன் என்ற பெயரில், மலிவு விலை உணவகத்தை துவங்க உள்ளது.இதற்கான பணிகளில், நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பதியில், பக்தர்கள் அதிகம் நடமாடும் ஐந்து இடங்களில், மலிவு விலை உணவகத்தை துவங்க, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக, கோவிந்தராஜ சுவாமி கோவில், ஸ்ரீநிவாசம் காம்பளக்ஸ், மகளிர் மருத்துவமனை, அலிபிரி பேருந்து நிலையம், திருப்பதி ரயில் நிலையம் போன்ற இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இங்கு குறைந்தபட்சம், 300 பேர் உணவு அருந்தும் வகையில் வசதி செய்யப்படுகிறது. மேலும், காலையில், இட்லி, பொங்கல்; மதியம், சாம்பார் சாதம், தயிர் சாதம்; இரவு, இரண்டு சப்பாத்திகள், பருப்பு கடைசல் வழங்கப்பட உள்ளது. அதேநேரத்தில், விலை பட்டியல் மட்டும் இன்னும் தயாரிக்கப்படவில்லை என, அதிகாரிகள் கூறினர்.