பதிவு செய்த நாள்
22
செப்
2014
12:09
கோவை : மேல்முடி ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜைகளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, வனத்துறையினரிடம் அனுமதி பெற, மேல்முடி ரங்கநாதர் பெருமாள் வழிப்பாட்டு சங்கம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மேல்முடி ரங்கநாதர் கோவில், கடல்மட்டத்திலிருந்து, 4100 அடிகளுக்கு மேல் உள்ளது. கோவையில் இருந்து, 16 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. சின்னத்தடாகம், கோவனுார், பாலமலை வழியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சென்று கொண்டுள்ளனர். இயற்கை வளமும், மூலிகை செடிகளும், சுத்தமான காற்றும் நிறைந்த அமைதியான சூழலில் அமைந்துள்ள இக்கோவிலில், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் பெருமாள். இங்கு, ஆஞ்சநேயர், முருகன், சிவலிங்கம், சாய்பாபா, அம்மன், கருடாழ்வார், விநாயகர், சப்த கன்னியரை பக்தர்கள் வழிபடுகின்றனர். 1973ம் ஆண்டில் தான் கோவிலுக்கு சுவர் எழுப்பி, ஸ்தலம் அமைத்து, 1977ல் கும்பாபிஷேகம் நடந்தது.மேல்முடி ரங்கநாதர் கோவில் பராமரிப்பு, பூசாரிகளை தேர்ந்தெடுத்தல், பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேம்படுத்த, கோவில் வழிபாட்டு கமிட்டி, செயல்பட்டு வருகிறது. தற்போது, சின்னத்தடாகம், துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய உள்ளூர்களிலும், திருப்பூர், சென்னை என, வெளி மாவட்டங்களிலும் இயங்கி வருகிறது. கோவில் வழிபாட்டு சங்க தலைவர் சந்திரசேகர் கூறுகையில், இந்த ஆண்டு, பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில், வனத்துறையினரிடம், கோவில் கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அனுமதி பெற்று தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புரட்டாசி சனிக்கிழமைகளுக்கான அனுமதி பெயர் பதிவை, பக்தர்கள், மூன்று நாட்களுக்கு முன் தெரியப்படுத்த வேண்டும். பூஜை சாமான்கள், உணவு, பாட்டில்கள் இவற்றை கொண்டு செல்வதை தவிர்க்கவும், என்றார்.அனுமதி பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 94439 34034, 99524 18568, 93456 22022.