பதிவு செய்த நாள்
23
செப்
2014
01:09
வாலாஜாபாத் : போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், திருப்பணி துவங்கி மூன்று ஆண்டுகள் ஆகியும், அகத்தீஸ்வரர் கோவில் கட்டுமான பணி நிறைவு பெறாமல் கிடப்பில் உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தில், இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த அங்காளபரமேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, 28 ஏக்கர் நிலம் இருந்தும், போதிய பராமரிப்பு இன்றி இருந்தது. நன்கொடையாளர் மூலம் கோவிலை புதுப்பிக்க அறநிலைய துறை அதிகாரிகள் முடிவு செய்து, 2011, அக்டோபர் மாதம் பாலாலயம் செய்து, மூலவருக்கு கருவறை எழுப்பினர். அதன் பின் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் கூறுகையில், நன்கொடையாளர் திருப்பணியை தொடரவில்லை என்றால், அறநிலைய துறை மூலம், புதிய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசு ஒப்புதல் பெற்ற பின்னரே, திருப்பணி துவங்கும்,” என்றார்.