பதிவு செய்த நாள்
23
செப்
2014
01:09
மானாமதுரை: மானாமதுரையில் நவராத்திரி விழாவிற்காக ’கொலு பொம்மை’ தயாரிக்கப்படுகின்றன. இவ்வூரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சீசனுக்கு தகுந்த பொருட்களை தயாரிக்கும் இவர்கள் தற்போது நவராத்திரி என்பதால் கொலு பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கல்யாண சீர்வரிசை செட், தசாவதார செட்,கிரிவல செட், அண்ணாமலையார் செட்,தவில் செட், நவகிரக செட்,கோவில் பூஜை செட்,திருப்பதி வெங்கடாஜலபதி செட், என பல்வேறு செட் பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். ஒரு செட் பொம்மை என்பது 9 பொம்மைகளில் இருந்து அதிகபட்சமாக 101 பொம்மைகள் வரை இருக்கும். ஒன்பது பொம்மைகள் கொண்ட செட் ரூ.200, 101 பொம்மைகள் கொண்ட செட் ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.வரும் 25ம் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவின் போது வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து அலங்கரிப்பர். பெரும்பாலான பொம்மைகள் அச்சுகளில் வார்க்கப்பட்டு வெயிலில் காயவைத்து வர்ணம் தீட்டி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஒரு அடி உயரத்தில் இருந்து தான் கை வண்ணத்துடன் சிலைகள் செய்கின்றனர். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வண்ணம் பொம்மைகளை சூளைகளில் வைத்து சுடுவதில்லை. வண்ணங்களில் ரசாயன கலப்பு இல்லாத வண்ணங்களையே பயன்படுத்துகின்றனர்.நாள் ஒன்றுக்கு ஒரு தொழிலாளி 50 பொம்மை வரை தயாரிக்கிறார். அவற்றை வெயிலில் காயவைத்து அதன் பின் வர்ணம் தீட்டுகின்றனர்.கதிரேச வேளார் கூறுகையில்: கல்யாண சீர்வரிசை செட், தசாவதார செட், ஆஞ்சநேயருடன் விநாயகர் மற்றும் ஒரு வியாபாரி காய்கறிகளை விற்பனை செய்வது போன்ற என பலரக செட் பொம்மைகள் தயாரிக்கின்றோம். இந்தாண்டு புதிதாக கிரி வல செட் என திருவண்ணாமலை செட் அறிமுகம் செய்துள்ளோம். அண்ணாமலையார் கோயிலை பக்தர்கள் வலம் வருவது போன்ற செட் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது, என்றார்.