பதிவு செய்த நாள்
24
செப்
2014
12:09
பத்து நாள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, இன்று துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, சென்னையில் உள்ள கோவில்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. காளிகாம்பாள் கோவில்: பாரிமுனை, தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில், நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளும், சிறுமியர் மற்றும் சுமங்கலிகளை, அம்மனாக பாவித்து, அவர்களுக்கு அலங்காரம் மற்றும் பாதபூஜை நடத்தப்படும். சென்னமல்லீஸ்வரர் கோவில்: பாரிமுனை, தேவராஜ முதலி தெருவில் உள்ள, பிரமராம்பிகை சமேத சென்னமல்லீஸ்வரர் கோவிலில், தினமும் மாலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடத்தப்படும். அத்துடன், தினமும் வடமாநில, தாண்டியா உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
ஏகாம்பரேஸ்வரர் கோவில்: தங்கசாலையில் உள்ள காமாட்சிஅம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளுவார். அத்துடன் கொலுவும் அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளன. மல்லிகேஸ்வரர் கோவில்: மண்ணடி, மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் கோவிலில், நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று காலை 9:00 மணிக்கு கொடிஏற்றத்துடன் துவங்குகிறது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில், உற்சவர் மரகதாம்பாள் தினமும், கவுரி, லட்சுமி, அன்னபூரணி உள்ளிட்ட அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளுவார். அத்துடன் இரவு, 7:00 மணியளவில், கொலு மண்டபத்தில் பள்ளி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
கன்யகா பரமேஸ்வரி கோவில்: கொத்தவால் சாவடியில் உள்ள கன்யகா பரமேஸ்வரி கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு, இன்று காலை, 6:00 மணிக்கு கலச பூஜை நடக்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளுவார். கல்லுாரி மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுடன், ஒன்பதாம் நாளன்று சண்டிஹோமம், சுமங்கலி பூஜை மற்றும் குண்டப்பிரவேசம் நடக்கும். பத்தாம் நாளான விஜயதசமியன்று, இரவு, 7:00 மணிக்கு, கன்யகா பரமேஸ்வரி அம்மனின் பாரிவேட்டை நடக்க உள்ளது. இதேபோல், மயிலாப்பூர் கபாலீசுவரர், திருவான்மியூர் மருந்தீசுவரர் உள்ளிட்ட சிவாலயங்களிலும், மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும், நவராத்திரி விழா இன்று துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது.