பதிவு செய்த நாள்
24
செப்
2014
12:09
திருவள்ளூர் : மகாளய அமாவாசையை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், திரளான பக்தர்கள் குவிந்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவில், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று. இங்கு, ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும், பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.இந்நிலையில், நேற்று, புரட்டாசி அமாவாசை சிறப்பானதாக கருதப்படும். மகாளய அமாவாசையை முன்னிட்டு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், திரளான பக்தர்கள், திருவள்ளூருக்கு வந்திருந்தனர்.சிலர், நேற்று முன்தினமே வந்திருந்து, கோவில் வளாகம், குளக்கரை பகுதிகளில் தங்கியிருந்தனர். நேற்று காலை, கோவில் திருக்குளத்தில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின், சிறப்பு அலங்காரத்தில் இருந்த வீரராகவ பெருமாளை தரிசித்து சென்றனர்.