பதிவு செய்த நாள்
24
செப்
2014
01:09
பழநி : நவராத்திரி விழாவை முன்னிட்டு, பழநிபகுதியில் கொழுவைக்க பொம்மைகள் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட விலை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரிவிழா நடக்கும் 9 நாட்களும் வீடுகள், கோயில்கள், தனியார் நிறுவனங்கள், மண்டபங்களில் கொழு பொம்மைகள் வைத்து சிறப்பு பூஜையுடன் வழிபாடுசெய்வது வழக்கமாகும். இந்த ஆண்டு செப்., 24 முதல் அக்., 3 வரை நவராத்திரி விழா நடக்கிறது. இதன்காரணமாக கொழுவில் இடம்பெறும் பொம்மைகள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட பொம்மையின் விலை ரூ.50 வரை அதிகரித்துள்ளது. தர்மபுரியைச் சேர்ந்த வடிவேல் கூறுகையில்,"" கடந்த 20 ஆண்டுகளாக, பழநி தெற்குரதவீதியில் நவராத்திரி விழா, கொழுவில் வைக்கப்படும், வித,விதமான சுவாமிபொம்மைகள், சித்தர்கள், புராணகதைகளின் நாயகர்கள் உட்பட பல்வேறு பொம்மைகளை, தஞ்சாவூர் பகுதியில் மொத்தமாக வாங்கி விற்கிறோம். இந்த ஆண்டு வண்டி வாடகை மற்றும் மண் பற்றாக்குறை காரணமாக பொம்மைகளின் விலை அதிகரித்துள்ளது. எங்களிடம் தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்படுவது, ஒளவையார் நாவல் பழம் கேட்பது, அகத்தியர், கிரகலட்சுமி, பிரதோஷ சிவன் செட் என ரூ.100 முதல் 3000 வரை தனித்தனிபொம்மைகளாகவும், குழுவாகவும் உள்ளன. புதிய வரவாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.3000 ஆகும். ஒருசிலர் தனிபொம்மைகளை வாங்கி கோயில் கொழுவில் வைப்பதற்காக கொடுக்கின்றனர். வீட்டில் வைப்பதற்காகவும் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர், என்றார்.