பதிவு செய்த நாள்
26
செப்
2014
11:09
ஸ்ரீ வில்லிபுத்தூர்: திருப்பதி வெங்கடாசலபதி கோயில் புரட்டாசி விழாவில் கருடசேவையன்று பெருமாளுக்கு சாற்றுவதற்கான செப்.28.,ம் தேதி ஸ்ரீவி., ஆண்டாள் சூடி களைந்த மாலை திருப்பதி செல்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை தினமும் வடபத்ரசாயிக்கு சாற்றப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது, ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை அணிந்து இறங்குவார். ஸ்ரீரங்கத்தில் சித்திரை விழா தேரோட்டத்தின் போதும் ஆண்டாளுக்கு சாற்றிய பரிவட்டம் ரங்கநாதருக்கு சார்த்தப்படும்.இது போல், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி விழாவின் 5ம் நாளன்று காலையில் நடக்கும் கருட சேவையில், ஸ்ரீவி.,ஆண்டாள் சூடி களைந்த மாலையை பெருமாளுக்கு சாற்றி சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இதற்காக செப்.28ம் தேதி மதியம் திருப்பதி வெங்கடாசலபதிக்கு சார்த்தப்படும் பெரிய மாலை, கிளி, பரிவட்டம் ஸ்ரீவி., ஆண்டாளுக்கு சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின், மாடவீதி, ரதவீதிகள் சுற்றி வரப்பட்டு திருப்பதி கொண்டு செல்லப்பட உள்ளது. ஏற்பாடுகளை ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம், கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.