பதிவு செய்த நாள்
04
அக்
2014
12:10
மைசூரு: தசரா உற்சவத்தில், 404வது ஜம்பு சவாரி, இன்று நடக்கிறது. கடந்த ஒன்பது நாட்களாக நடந்த நவராத்திரி விழாவில் முக்கிய நிகழ்வான ஜம்பு சவாரி, இன்று நடக்கிறது. மைசூரு, அரண்மனை பலராமா நுழைவு வாசல் அருகே, கர்நாடக முதல்வர் சித்தராமையா, நந்தி கொடிக்கு பூஜை செய்து, நிகழ்ச்சியை முறைப்படி துவக்கி வைக்க உள்ளார். முதல்வருடன், மைசூரு அரச குடும்பத்தை சேர்ந்த, ராணி பிரமோதாதேவி உடையார், கர்நாடக அமைச்சர் சீனிவாஸ் பிரசாத் ஆகியோர், மைசூரு அரண்மனை முன்பகுதியில், ஜம்பு சவாரி ஊர்வலத்தை துவக்கி வைக்க உள்ளனர். ஊர்வலம், சாயாஜி ராவ் சாலை வழியாக, ஐந்து கி.மீ., தூரத்திலுள்ள பன்னி மண்டபத்தில் முடியும். அர்ஜூனா என்ற யானை, ஊர்வலத்தில், 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமந்து செல்ல உள்ளது. ஊர்வலத்தில், மேரி, வரலட்சுமி ஆகிய யானைகள், தங்க அம்பாரிக்கு வலம் மற்றும் இடப்புறமாக செல்ல உள்ளன. பட்டத்து யானையாக, கஜேந்திரா இருக்கும்; இது, பலராமா ராஜமுத்திரையை சுமந்து சவாரியில் பங்கேற்கும். தங்க அம்பாரியில், சாமுண்டீஸ்வரி சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.