பதிவு செய்த நாள்
06
அக்
2014
11:10
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்தக் குளத்தில், சுற்றுச்சுவர் பலப்படுத்தப்பட்டு, பாதுகாப்பிற்கு இரும்பு தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்றது வருகிறது. நால்வரால் பாடல் பெற்ற தலமாக விளங்கும் திருக்கழுக்குன்றத்தில், பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலின், தெற்கே சிறப்புமிக்க சங்குதீர்த்தக் குளம் 12 ஏக்கரில் அமைந்துள்ளது. இக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறப்பதால், சங்குதீர்த்தக் குளம் என, அழைக்கப்படுகிறது.மார்கண்டேய முனிவர், சிவனை நோக்கி தவமிருந்தபோது, அவரை வழிபடுவதற்காக, சங்கு பிறந்ததாக ஐதீகம். அந்நாள் முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்தில் சங்கு பிறக்கிறது.இத்தகு குளத்தில் சில சமூக விரோதிகள், குளத்தின் அருகில் வசிக்கும் சிலர் திடக்கழிவு களை கொட்டியும், இயற்கை உபாதைகளை கழித்தும் அசுத்தம் செய்தனர். இதுகுறித்து ’தினமலர்’ நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து இந்து அறநிலையத்துறை ஆணையர், குளத்தினை பாதுகாக்க, திருவண்ணாமலை கோவில், திருவேற்காடு கோவிலின் உபரி நிதியிலிருந்து தலா பத்து லட்சம் ரூபாயும், ஆணையர் பொது நிதியிலிருந்து எட்டு லட்சம் என, இருபத்தி எட்டு லட்சம் ஒதுக்கீடு செய்தார்.அதை தொடர்ந்து குளத்தின் சுற்றுச்சுவர்கள் பலப்படுத்தப்பட்டு, சுவரின் மேல் பாதுகாப்பிற்காக இரும்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.