பதிவு செய்த நாள்
08
அக்
2014
12:10
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள, காவிரி கரை ஓரத்தில் காயத்ரி லிங்கேஸ்வரர் சன்னதி முன்பாக, 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இரண்டாவது பரிகார மண்டபம் கட்டும் பணி துவங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, பவானி சங்கமேஸ்வரர் கோவில், மிகச்சிறந்த பரிகார ஸ்தலம். இக்கோவிலின் பின்புறம், இரட்டை விநாயகர் கோவில் பகுதியில், காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால், கூடுதுறை எனவும், தென்னகத்தின் காசி எனவும் அழைக்கின்றனர். இக்கோவிலின் பின்பகுதியில் இருந்த பரிகார மண்டபம், சிமெண்ட் ஷீட்டில் சிறிய அளவில் இருந்ததால், போதிய இடவசதி இன்றி, பக்தர்கள் அவதிப்பட்டனர். உடன், அரசு நிதியுதவியுடன், பிரம்மாண்டமான முறையில், 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய, மார்பிள் பதிக்கப்பட்ட, புதிய பரிகார மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இம்மண்டபம், விரைவில் திறப்பு விழா காண உள்ளது. தற்போது பரிகாரம் செய்ய, கோவிலுக்கு வரும் பக்தர்கள், போதிய இடவசதியின்றி, கோவில் பின்பகுதியில் இருந்த, பொழுதுபோக்கு அம்சம் உடைய பார்க்கை, முற்றிலுமாக சேதபடுத்தி, பரிகார பூஜை செய்து வருகின்றனர். முக்கிய வி.ஐ.பி.,களுக்காக காளகஸ்தி, தீர்த்தவாரி போன்ற இரண்டு மண்டப இருந்தது. இதில், காளகஸ்தி மண்டபமும் இடிக்கப்பட்ட நிலையில், புதிய பரிகார மண்பத்துடன் இணைக்கப்பட்ட, தீர்த்தவாரி மண்டபமும் திறக்கப்படாமல் உள்ளது. இதில், காவிரி கரை ஓரம் உள்ள காயத்ரி லிங்கேஸ்வரர் கோவில் முன் பகுதியில், ஒரு சிமெண்ட் செட்டில், 30க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து, பரிகாரம் செய்ய கூடிய வகையில் இருந்த செட், அவசர, அவசரமாக பிரிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், அந்த இடத்தில் புதிய, இரண்டாவது பரிகார மண்டபம் கட்ட முடிவு செய்து, அரசின் அனுமதியுடன், 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30 அடி அகலம், 55 அடி நீளம் உடைய, பரிகார மண்டபம் கட்டிட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதனால், கோவிலுக்கு பரிகாரம் செய்ய வரும் பக்தர்களுக்கு, பரிகாரம் செய்ய இடம் இல்லாமல் அவதிப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால், உடனடியாக கோவில் நிர்வாகம், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென, புரோகிதர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.