பதிவு செய்த நாள்
13
அக்
2014
12:10
கிணத்துக்கடவு : தீபாவளியன்று அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டாடுவது வழக்கம். ஆனால், கோவை மாவட்டம் வடசித்துார் கிராமத்தில் மட்டும், பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் மயிலந்தீபாவளி அன்றுதான் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இக்கிராமத்தில் இந்து, முஸ்லிம் குடும்பத்தினர் உறவினர் போல் பழகி வருவதால், ஆண்டுதோறும் நடைபெறும் தீபாவளிக்கு மறுநாள் வரும், மயிலந்தீபாவளி கிடா வெட்டில் கலந்து கொள்கின்றனர்.மயிலந்தீபாவளிக்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படுகிறது. இக்கிராமத்தில் இருந்து திருமணமாகிச் சென்ற பெண்கள், புகுந்த வீட்டில் தீபாவளியை முடித்து விட்டு, தாய்வீட்டில் நடக்கும் மயிலந்தீபாவளிக்கு விருந்தினராக வருவது இக்கிராமத்தில் பிறந்த பெண்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு வரும் 22ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. 23ம் தேதி, மயிலந் தீபாவளியை இப்பகுதி மக்கள் கொண்டாடுகின்றனர்.அன்று மாலை 4.00 மணிக்கு பொதுமக்கள் அனைவரும், ஊராட்சி அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் ஒன்று கூடி, அங்கு அமைக்கப்பட்டுள்ள ராட்டினத்தில் உற்சாகமாக ஏறி விளையாடியபடி, மயிலந் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர். இந்தாண்டும் மயிலந்தீபாவளி கொண்டாட, மக்கள் தயாராகி வருகின்றனர்.