பதிவு செய்த நாள்
13
அக்
2014
12:10
மாதவரம் : பஞ்சலோக சாமி சிலைகள் மாயமானதாக வந்த தகவலையடுத்து, போலீசார் தேடி அலைந்து இறுதியில் அசடு வழிந்தனர். மாதவரம் பஜார் வீதியில் கங்கையம்மன் கோவிலில், புரட்டாசி மாத திருவிழாவை ஒட்டி, நேற்றுமுன்தினம் அங்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதில், பஞ்சலோகத்தால் ஆன 2 அடி உயரமுள்ள பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் வைத்து பூஜிக்கப்பட்டன. சிறிது நேரத்திற்கு பின் சிலைகள் மாயமாகிஇருந்தன. இதுகுறித்து, போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது.இதனால், அந்த பகுதியில், சிலையுடன் யாரும் தப்பி விடக்கூடாது என்பதற்காக, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும், பழையகுற்றவாளிகள் குறித்தும் விசாரிக்க துவங்கினர். இதற்கிடையே, கோவிலில் சிலர் சிலைகளை தேடியபோது, மூன்று சிலைகளும் ஊஞ்சலுக்கு பின்புறம் தலைகீழாக கவிழ்ந்து கிடந்தது தெரியவந்தது.அதை கவனிக்காமல் கோவில் நிர்வாகிகள் புகார் செய்ய, அங்கு சென்ற போலீசாரும் விசாரணை என்ற பெயரில் பரபரப்பாக்கி, இறுதியில் அசடு வழிந்தனர்.