வடமதுரை : எரியோடு திருஅருள் பேரவை சார்பில், 26ம் ஆண்டாக புரட்டாசி சனி யாத்திரை நடந்தது. இக்குழுவினர் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில், பல்வேறு கோயில்களுக்கு ஆன்மிக ஸ்தல யாத்திரை சென்று வருகின்றனர். இந்தாண்டின் முதல் புரட்டாசி சனியன்று வி.மேட்டுபட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதிர்நரசிங்க பெருமாள், ஆஞ்சநேயர் கோயிலுக்கும், இரண்டாவது சனியன்று சீத்தமரம் நால்ரோடு அருகிலுள்ள பிரசன்னப் பெருமாள் கோயிலுக்கும் சென்றனர். மூன்றாவது சனியன்று மண்டபம்புதூர் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கும், நான்காவது சனிக்கிழமையான நேற்றுமுன்தினம் குருநாத நாயக்கனூர் கிராமம் மங்களம்புள்ளி லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சென்றனர். சிறப்பு வழிபாடும், பஜனை, பக்தி இன்னிசையும் நடந்தது. "நம்பினோர் கெடுவதில்லை, பக்த ஆஞ்சநேயர் எனும் தலைப்புகளில் பக்தி சொற்பொழிவு நடந்தது. திருஅருள் பேரவை தலைவர் என்.ராமகிருஷ்ணன், செயலாளர் எம்.பழனிச்சாமி, ஓய்வு பெற்ற துணை கலெக்டர் மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.