குணமில்லாத மருமகன்கள் திருந்த பெண்ணின் தந்தை வழிபட வேண்டிய தலம் மேலத்திருமணஞ்சேரி என்னும் எதிர்கொள்பாடி ஐராவதேஸ்வரர் கோயில். தல வரலாறு: பரத்வாஜ மகரிஷிக்கு பார்வதியே குழந்தையாகப் பிறந்தாள். மணப்பருவம் எய்தபோது, சிவனிடம் அவளை மணந்து கொள்ளும்படி வேண்டினார் மகரிஷி. சிவனும்அம்பிகையை மணக்கபூலோகம் வந்தார். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வெளியே வந்து வரவேற்பது நம் கலாசாரம். பரத்வாஜரின் வேண்டுதலுக்காக மாப்பிள்ளையாக வந்த சிவன் இங்கே எழுந்தருளினார். பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் தலத்திற்கு எதிர்கொள்பாடி என்று பெயர். ஐராவதம் என்னும் யானை வழிபட்டதால் ஐராவதேஸ்வரர் என்றும் பெயருண்டு.
மகளுக்காக பிரார்த்தனை: மகளின் வாழ்க்கை நன்றாக அமைய பெற்றோர் வழிபட வேண்டிய தலம் இது. இங்கு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்கிறார்கள். மருமகன் மீது மனக்கசப்பு உள்ளவர்கள் இங்கு பூஜை நடத்துகின்றனர்.
மருமகனுக்கு வரவேற்பு: இக்கோயிலில் பிரம்மோற்சவம் கிடையாது. இங்கிருந்து 2 கி.மீ., துõரத்தில் உள்ள திருமணத்தலமான திருமணஞ்சேரியில் கல்யாண சுந்தரருக்கு சித்திரை மாதம் திருக்கல்யாணம் நடக்கும். மாப்பிள்ளை கோலத்தில் அவர் எதிர்கொள்பாடி கோயிலுக்கு எழுந்தருள்வார். அவரை கோயில் அர்ச்சகர் தன்னை அம்பாளின் தந்தையாகப் பாவித்து, பூர்ணகும்ப மரியாதை கொடுத்து வரவேற்பார். இதன் பின்பு, சுவாமி திருமணஞ்சேரிக்கு மீண்டும் சென்று, அம்பிகையை மணந்து கொள்வார்.
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 27 கி.மீ., துõரத்தில் திருமணஞ்சேரி. இங்கிருந்து 2 கி.மீ., துõரத்தில் எதிர்கொள்பாடி.