பதிவு செய்த நாள்
14
அக்
2014
11:10
மைசூரு : மைசூரு தசரா விழாவுக்கு, காட்டிலிருந்து யானைகள், சில கட்டமாக அழைத்து வரப்பட்டன. மைசூருக்கு வந்த பின், யானைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தசரா விழாவன்று, மைசூரு தேவதை சாமுண்டீஸ்வரி தேவியின் விக்ரகம் வைக்கப்பட்ட, 750 கிலோ தங்க அம்பாரியை சுமந்த அர்ஜுனா, அம்பாரியின் இரு புறமும், ’கும்கி’ யானைகளாக சென்ற யானைகள், கடந்த 6ம் தேதி, காட்டுக்கு திரும்பின. தங்க அம்பாரியை சுமந்து, ஹாட்ரிக் சாதனை செய்த அர்ஜுனா, சுடுதண்ணீரால் குளிப்பாட்டப்பட்டது. விஜயதசமி, ஜம்புசவாரி ஊர்வலத்தில் பங்கேற்றிருந்த யானைகளுக்கு, அணிவிக்கப்பட்டிருந்த அலங்காரப் பொருட்கள், சரி பார்த்த பின், இருப்பிடத்தில் வைக்கப்பட்டது. தசரா யானைகளுக்கு, ’ஸ்பெஷல் கவனிப்பு’ நடந்ததால், முதல் குழுவில் வந்திருந்த ஆறு யானைகளில், இம்முறையும் எடையை அதிகரித்து கொண்டதில், பலராமா, முதலிடத்தில் உள்ளது. முதல் குழுவில் வந்திருந்த அர்ஜுனா, பலராமா, அபிமன்யூ, கஜேந்திரா, வரலட்சுமி, மேரி யானைகளின் உடல் எடையும் பரிசோதிக்கப்பட்டது. ஜம்பு சவாரிக்கு முதல் நாளும், இந்த, ஆறு யானைகளின் உடல் நலம் பரிசோதிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும், ஊட்டச்சத்தான உணவு வழங்கியதே, இவைகளின் உடல் எடை அதிகமானதற்கு காரணம் என, யானையை சோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.