பதிவு செய்த நாள்
24
அக்
2014
03:10
ஆறுபடை வீடுகளுக்கு எண் தரப்பட்டது எப்படி?: தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் படைவீடு எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்துõர் மட்டுமே. ஆனாலும், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, ஆறுபடை வீடு என்கிறோம். வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒருவர், வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது ஏழ்மை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார் (வழி காட்டுவார்). இந்த வகையில் அமைந்த நுõல்கள் சங்க காலத்தில், ஆற்றுப்படை எனப்பட்டது. மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் தலங்களிலுள்ள முருகனை வணங்குங்கள், உங்கள் கவலையெல்லாம் தீரும் என்று ஆற்றுப்படுத்தினார் நக்கீரர். அவர் இயற்றிய திருமுருகாற்றுப்படையே முருகனின் ஆறுபடை ஆயிற்று என்றும் சொல்வதுண்டு. அவர் பாடிய வரிசையிலேயே, திருப்பரங்குன்றம், திருச்செந்துõர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய ஆறுபடை வீடுகளுக்கும் எண் தரப்பட்டது.