பதிவு செய்த நாள்
29
அக்
2014
11:10
நாமக்கல் : சாலப்பாளையம், விவசாயி ஒருவரின் வீட்டில் உள்ள வேப்பமரத்தில், பால் வடியும் அதிசயத்தை, சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் வந்து பார்த்து, பயபக்தியுடன் வழிபட்டுச் செல்கின்றனர். நாமக்கல் அடுத்த, செருக்கலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாலப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மகன், பழனிசாமி, 35. விவசாயியான அவரது வீட்டில், 12 வயதுடைய வேப்பமரம் ஒன்று உள்ளது. அந்த வேப்பமரத்தில், நான்கு நாட்களாக பால் வடிந்து வருகிறது. இந்த அதிசயம் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு பரவியது.கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து, பக்தி பரவசத்துடன் வேப்ப மரத்தில் வடியும் பாலை கண்டு வழிபட்டனர். அப்போது ஒரு பெண்ணுக்கு அருள் வந்து, ‘எனக்கு கற்பூரம் ஏற்றினால்தான் நான் யார் என்று சொல்வேன்’ எனத் தெரிவித்துள்ளார்.அதை தொடர்ந்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அப்போது, ‘நான் புதுப்பாளையம் மாரியம்மன் வந்துள்ளேன். எனக்கு சூடம் ஏற்றி, மேளத்தாளத்துடன் அழைத்துச் செல்ல வேண்டும்’ என, தெரிவித்தார். இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘வானிலை மாற்றத்தால், குளிர்ச்சி ஏற்பட்டுள்ளதால், மரத்தில் இருந்து ஒரு விதநீர் வெளியேறி உள்ளது’ என்றார்.கிராம பகுதிகளில், வேப்பமரத்தை மாரியம்மனுக்கு உகந்ததாக கருதும் வழக்கம் உள்ளது. இச்செய்தியை அறிந்த சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலர் பைக், மொபட் உள்ளிட்ட வாகனங்களில் வந்து, வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தை பார்த்துச் சென்ற வண்ணம் உள்ளனர்.