தேனி : கந்த சஷ்டி விழாவின் பிரதான நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டனர்.இன்று(அக்.30) திருக்கல்யாணம் நடக்கிறது. தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. தேனி கணேசகந்த பெருமாள் கோயிலில் காலையில் பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்தனர். மாலையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இது போல் பெத்தாஷி விநாயகர் கோயில்,தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள சுப்பிரமணியர் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.சுவாமி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டிவிழா அக்.,24ல் மூலவருக்கு சிறப்பு பூஜையுடன் துவங்கியது. கோயிலில் கட்டட அமைப்பில் எந்த கோயிலிலும் இல்லாதபடி, சுப்பிரமணியர், ராஜேந்திரசோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி ஆகிய மூன்று கோயில்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது.மூன்று கொடி மரங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.பக்தர்கள் விரதம்: பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் விரதம் மேற்கொண்டிருந்தனர். நேற்று பாலசுப்பிரமணியர் சூரசம்ஹாரம் நடத்தி அசுரர்களளை வதம் செய்தார்.இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. பால்குடம் வழிபாடு: கந்தசஷ்டியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் கந்தசஷ்டி விழா நடந்து வருகிறது. ஆறாம் நாள் நிகழ்ச்சியான நேற்று நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் பால் குடம் எடுத்தனர். அவர்கள் கோயிலில் இருந்து பிரதான வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து சுந்தரவேலவருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து சுந்தரவேலவருக்கு சிறப்பு அபிஷேகமும், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகமும் நடந்தது. மகளிர் குழுவினரின் தெய்வீக கூட்டு வழிபாடு பிரார்த்தனை நடந்தது.மாலை 6 மணிக்கு சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.