பதிவு செய்த நாள்
01
நவ
2014
11:11
திருப்பதி : திருமலை ஏழுமலையானுக்கு, நேற்று மதியம், 1:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, வருடாந்திர புஷ்பயாகம் நடந்தது. உலகத்தை இயற்கை பேரழிவுகளில் இருந்து காக்க, ஆண்டுதோறும், திருமலை - திருப்பதி தேவஸ்தானம், புஷ்பயாகத்தை நடத்தி வருகிறது. 15ம் நூற்றாண்டுகளில், திருமலையில் நடந்து வந்த புஷ்பயாகம், காலப்போக்கில் நின்று போனது.அதை தேவஸ்தானம், 1980 முதல், மீண்டும் தொடங்கி நடத்தி வருகிறது.இதற்காக, பெங்களூரு, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்து, 20 வகையான, எட்டு டன் மலர்கள் வர வழைக்கப்பட்டன. இந்த மலர்களை ஏழுமலையான் திருவடியில் வைத்து பூஜை செய்து, புஷ்பயாகம் நடந்த சம்பங்கி மண்டபத்திற்கு கொண்டு வந்தனர்.மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவிக்கு, ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. அர்ச்சகர்கள் ஹோமம் நடத்தி, பின், மலர்களால் ஏழுமலையான் திருவடி முதல் மார்பு வரை, அர்ச்சித்தனர்.