உண்டியல் தொகை மூலம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அடிப்படை வசதிகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2014 01:11
சிதம்பரம் : நடராஜர் கோவில் உண்டியல் தொகையை அரசு வங்கிக் கணக்கில் செலுத்தி, கோவிலுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என நந்தனார் ஆய்வு மையம் சார்பில் சப் கலெக்டர் அரவிந்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மைய அமைப்பாளர் காவியச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் அளித்துள்ள மனு:சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத் துறையின் கீழ் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டு அரசு நிர்வகித்து வந்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்த நடராஜர் கோவிலை விடுவித்து பொது தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்த கால கட்டத்தில் வைக்கப்பட்ட 9 உண்டியல்கள் மூலம் வந்த பக்தர்கள் காணிக்கை மற்றும் திருப்பணி நிதி என 3.41 கோடி ரூபாய், தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவை சபாநாயகர் கோவில் பெயரில் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்த போது கிடைத்த உண்டியல் மற்றும் திருப்பணி தொகை மற்றும் பொருள்கள் அரசுக்கு சொந்தமானதாகும். இதனை நடராஜர் கோவில் தீட்சிதர்களிடம் ஒப்படைத்தது ஏற்புடையது அல்ல.திருப்பணித் தொகை அரசு வங்கியில் செலுத்தி வைப்புத் தொகையாக இருக்க வேண்டும். இதன் மூலம் வட்டித் தொகையில் கோவிலில் குடிநீர், கழிப்பறைகள், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி போன்ற வசதிகள் செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.