சோற்றுக்குள் (அன்னம்) இருக்கிறார் சொக்கநாதசுவாமி, சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றெல்லாம் பழமொழி சொல்வார்கள். எப்போதும் சாப்பிட்டுக்கொண்டு, சோம்பேறித்தனமாக இருப்பவர்களை சுட்டிக் காட்டுவதற்காக இந்த பழமொழி வந்ததாகச் சொல்வர். உண்மையில், அன்னாபிஷேகத்தை வைத்துதான் இந்த பழமொழி ஏற்பட்டிருக்க வேண்டும். அன்னாபிஷேகம் செய்யப்பட்ட சிவனை தரிசிப்போருக்கு, அவரது அருள் பரிபூரணமாகக் கிடைப்பதுடன் முக்தியும் கிடைக்கும் என்பதால் இவ்வாறு சொல்லியிருக்க வேண்டும். அன்னாபிஷேக வேளையில் சுவாமியைத் தரிசித்தால், வாழும் காலத்தில் உணவிற்கு பஞ்சமில்லாத நிலையும், வாழ்க்கைக்குப் பின் சொர்க்கமும் கிடைக்கும் என்பர். எல்லா உயிர்களுக்கும் பரமசிவனே படியளக்கிறார். சிவனை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பவர்களுக்கு என்றும் உணவுக்கு குறைவிருக்காது என்பது ஐதீகம்.