பதிவு செய்த நாள்
04
நவ
2014
12:11
தினமலர் நாளிதழ், கடந்த, அக்., 16ம் தேதி, அக்கம் பக்கம் பகுதியில், வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான காலி நிலங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் அபகரிப்பு செய்யப்படுகின்றன என்ற நிதர்சனத்தை படத்துடன் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரன் காலனியில் காலியாக உள்ள, மேடு பள்ளங்கள் நிறைந்த நிலத்தில், மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி, கொசுக்களின் சொர்க்கமாக உள்ளது. தொற்றுவியாதிகள் பரவும் தலைமையிடமாக இந்த நிலம் உள்ளது. இதனால், கோவிலுக்கு எந்த வருமானமும், அறவே இல்லை. விடுதிகள் கட்டி வாடகைக்கு விட, இந்து கோவில் நிலம் தான் குறியா? இதேபோல், வடபழனி, என்.ஜி.ஓ., காலனி பிரதான சாலையை ஒட்டி, அகன்று விரிந்து, பரந்த காலிமனை உள்ளது. அது, எருமை மாடுகள், பசு மாடுகள் தொழுவமாக மாறி, மழைக்காலங்களில் சாணம் கரைந்து வீசும், துர்நாற்ற சுகாதாரக் கேடுகள் சொல்லி மாளாது. கோவில் நிலம், தனியார் வசதிக்காக, வியாபார ரீதியில் பயன்படுகிறது. கோவிலுக்கு வருமானம் சேரும் வகையில் திட்டமிட்டு, காலி மனைகளை, தற்காலிகமாக வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றி, கட்டணங்கள் வசூல் செய்ய, தமிழக அரசும், மாநகராட்சியும் விரைவில், திட்டமிட வேண்டும். பிருந்தா சுந்தரம், வடபழனி, சென்னை.