பதிவு செய்த நாள்
10
நவ
2014
10:11
திருப்பதி: திருமலையில், பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள, பார்வேட்டு மண்டபத்தில், ஒவ்வொரு ஆண்டும் வனபோஜனம் நடத்துவது வழக்கம். அதன்படி, நேற்று மதியம், பார்வேட்டு மண்டபம் பகுதியில், வனபோஜனம் நிகழ்ச்சியை தேவஸ்தானம் நடத்தியது.
ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி யானை வாகனத்திலும், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி மற்றும் பூதேவியர் தந்த பல்லக்கிலும், பஜனை குழுவினர் உடன் வர, பார்வேட்டு மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின், அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு மூலிகை கலந்த நீர், பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால், சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில், பக்தர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர். பின், அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு சமபந்தி வழங்கப்பட்டது; இதில் 2000 பேர் பங்கேற்றனர்.