மானாமதுரை: கார்த்திகை திருநாள் அன்று இல்லங்களை அலங்கரிக்க சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரில் பேன்சி ரக ரெடிமேட் விளக்குகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. டிச.,5 ல் கார்த்திகை திருநாள். பெரும்பாலான வீடுகளில் கார்த்திகை பிறந்த நாளில் இருந்து 30 நாட்களுக்கும் விளக்குகள் ஏற்றும் பழக்கம் உண்டு. கார்த்திகைக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரித்த, அகல்விளக்குகளை ஏற்றுவது வழக்கம். தற்போது ரெடிமேட் பேன்சி விளக்குகள் மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
சிவகங்கை, இடைக்காட்டூரில் பேன்சி ரக விளக்குகள் தயாரிப்பில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். பேன்சி விளக்குகள் தயாரிக்கும் சிவகுமார் கூறியதாவது: கும்பதீபம், அண்ணாமலையார் தீபம்,லட்சுமி நரசிம்மர் தீபம், குபேர தீபம், லட்சுமி தீபம், விநாயகர் தீபம், சங்கு தீபம் என பலவகைகளில் கார்த்திகை விளக்குகள் தயாரித்துள்ளோம். புதுச்சேரியில் இதற்கான அச்சுக்களை வாங்கி அதில் இருந்து விளக்குகளை தயார் செய்கிறோம். இங்கு, தினமும் 500 விளக்குகள் வரை தயாராகின்றன. ஆர்டரின் பேரில் மட்டுமே தயாரிக்கிறோம். வாடிக்கையாளர்கள் கேட்கும் டிசைன்களை பொருத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது, என்றார்.