பதிவு செய்த நாள்
17
நவ
2014
02:11
சேலம் : கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று, சபரிமலை சீஸன் துவங்குச்வதை அடுத்து, நேற்று, சேலத்தில் துளசிமாலை உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை கனஜோராக நடந்தது. விற்பனை அதிகரித்ததையடுத்து, அவற்றின் விலையை வியாபாரிகள் உயர்த்தியது, பொதுமக்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆண்டு தோறும், கார்த்திகை முதல் நாளில், சபரிமலைக்கு பக்தர்கள் மாலை அணிந்து, தங்களின், 48 நாட்கள் விரதத்தை துவக்குவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டில், கார்த்திகை முதல் நாளான இன்று, சபரிமலை சீஸன் துவங்குகிறது.இன்று காலை, துளசி மாலை அணிந்து விரதத்தை துவக்குவதற்காக, நேற்று அதிகளவில் பொதுமக்கள் துளசி மாலை, படிக மணி மாலை, காவி வேட்டி, துண்டு, பெட்சீட் உள்பட பூஜை பொருட்களை வாங்கினர்.இதனால், சேலம் கடை வீதி, செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில், நேற்று காவி வேட்டி, மாலைகள் உள்ளிட்ட அனைத்து பூஜை பொருட்களின் விற்பனை ஜோராக நடந்தது. காலையில் மந்த கதியில் இருந்த விற்பனை, மாலையில் சூடு பிடித்தது.விற்பனை அதிகரித்ததை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள், மாலைகள், காவி வேட்டி, துண்டுகள் உள்ளிட்ட அனைத்து பூஜை பொருட்களின் விலையிலும், 10 முதல், 20 சதவீதம் வரை, விலை உயர்வை அரங்கேற்றினர்.பூஜை பொருட்கள் மீதான விலை உயர்வு, பொதுமக்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.