பதிவு செய்த நாள்
17
நவ
2014
06:11
நீங்கள் பெருவழிப்பாதையில் சென்று ஐயப்பனை தரிசிக்கஉத்தேசித்திருக்கிறீர்களா! எருமேலியில்ஆரம்பித்து சபரிமலை வரையில் 56 கி.மீ., தூரம் கொண்டது இந்த பாதை.இதை நடந்தே கடக்கவேண்டும். உடல் பலமுள்ளவர்கள், தங்கள்மனதையும் தயார்படுத்திக் கொள்ளலாம்.இந்தப் பாதையில் ஜனவரி 1 முதல் மகரஜோதி வரையுள்ள காலத்தில் செல்வதுபாதுகாப்பானது. பக்தர்கள் அதிகம்வருவார்கள். மற்றநேரங்களில் விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும்.
எருமேலி!
பெருவழிப்பாதையின் ஆரம்ப இடம்எருமேலி. ஐயப்பன், எருமைத்தலை அரக்கி மகிஷியை கொன்ற தலம் இது. எருமைக்கொல்லி எனப்பட்ட இத்தலம், எருமேலி என மருவியது. ஐயப்பன் அரக்கியை அழித்ததைக் கொண்டாடிய தேவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதைக் குறிக்கும் வகையில் பக்தர்களும் இவ்விடத்தில் நடனமாடுவர். இந்நிகழ்ச்சியை பேட்டை துள்ளல் என்று அழைப்பர். உடலில் வண்ணப் பொடி பூசி, இலை, தழைகளை கட்டிக்கொண்டு, மரத்தாலான ஆயுதங்களுடன் மேளதாளம் முழங்க, சாமி திந்தக்கத்தோம் தோம், ஐயப்பன் திந்தக்கத்தோம் தோம்! எனஆடிப்பாடிக்கொண்டு பேட்டைசாஸ்தாவையும், ஐயப்பனின் நண்பரான வாபரையும் பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர். வாபர் பள்ளிவாசலில் விபூதி பிரசாதம் தரப்படும். அதன்பின் பந்தள மன்னர் ராஜசேகர பாண்டியன் கட்டிய தர்மசாஸ்தா கோயிலுக்கு சென்று வழிபட்டு பெருவழிப்பாதை பயணத்தை துவக்குகின்றனர்.
காளை கட்டி!
எருமேலியிலிருந்தே காட்டுப்பகுதி துவங்கி விடுகிறது. இங்கிருந்து நடக்க ஆரம்பித்தால் பேரூர்த்தோடு என்ற பகுதியை அடையலாம். அடுத்து வருவது காளைகட்டி என்ற இடம். மகிஷியை கொன்ற தன் மகன் மணிகண்டனை வாழ்த்துவதற்காக வந்த சிவன், தனது வாகனமான காளையைக் கட்டிய இடம் என்று கருதப்படுவதால், இப்பெயர் ஏற்பட்டது. இங்குள்ள அழுதா நதிக்கரையில் சிவன் கோயில் உள்ளது.
கல்லிடும் குன்று!
தர்மசாஸ்தா ஐந்து மலைகளுக்கு அதிபதி. இதில் முதலாவது அழுதாமலை. இங்கிருந்து தான் அழுதா நதி ஆரம்பமாகிறது. பக்தர்கள் இந்த நதியில் நீராடிவிட்டு, சிறு கற்களை எடுத்துக் கொண்டு அழுதாமலையின் மீது தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள். இந்நதிக்கரையில் சற்று நேரம் பக்தர்கள் இளைப்பாறுவர். பின்னர், கல்லிடும் குன்று என்ற இடம் வருகிறது. மகிஷியை வதம் செய்த சாஸ்தா, அவளது உடலை இங்கு புதைத்துவிட்டு, கனமான கற்களை வைத்துச் சென்றாராம். இதன் அடிப்படையில் அழுதா நதியில் எடுத்து வந்த கற்களை பக்தர்கள் இவ்விடத்தில் போட்டுச் செல்கிறார்கள்.
இஞ்சிப்பாறை கோட்டை!
அழுதாமலை உச்சியில், இஞ்சிப்பாறைக்கோட்டை இருக்கிறது. இங்குள்ள கோயிலில் தேவன் வியாக்ரபாதன் என்ற பெயரில் ஐயப்பசுவாமி அருளுகிறார். வியாக்ரம் என்றால் புலி. ஐயப்பன் புலிகளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன்னைக் காணச்செல்லும் பக்தர்களைப் பாதுகாக்கும் காவலராக விளங்குகிறார். ஆன்மிக ரீதியாக, இதை வேறு மாதிரியாக பொருள் காணலாம். மனிதன், இந்த உலக இன்பத்தை பெரிதென நினைக்கிறான். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய இன்பங்களை அடைய ஆசை கொண்டு, பாதகங்களைச் செய்யக் கூட தயாராகி விடுகிறான். இந்த பாதகங்களே மனதை ஆட்டிப்படைக்கும் புலிகளுக்கு ஒப்பிடப்படுகிறது. இந்த கொடிய புலிகளை கட்டிப்போட்டு விட்டால் மனதில் நல்ல சிந்தனைகள் மட்டுமே தங்கும். பக்தி மார்க்கத்திற்குள் மனிதன் வருவான்.
முக்குழி, கரியிலம்தோடு!
இஞ்சிப்பாறைக் கோட்டையை அடுத்து முக்குழி என்ற இடம் வரும். இங்கு மாரியம்மன் அருள் செய்கிறாள். அம்பிகையை வணங்கி விட்டு தொடர்ந்து நடந்தால் கரியிலம்தோட்டை அடையலாம். இவ்விடத்தில் மலைப்பாதை சமதளமாக இருக்கும். இங்கு பக்தர்கள் தங்கிச் செல்ல வசதியுள்ளது.