பதிவு செய்த நாள்
25
நவ
2014
12:11
திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று, சோமவார வழிபாடு நடந்தது. கார்த்திகை மாதம், திங்கட்கிழமை, சிவன் கோவில்களில் சோமவார வழிபாடு நடைபெறும். நேற்று, 2வது சோமவாரத்தை முன்னிட்டு, திருவள்ளூர் பூங்கா நகர் சிவா - விஷ்ணு கோவிலில், காலை 9:00 மணிக்கு, புஷ்பவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை ரதத்தில் புஷ்பவனேஸ்வரர் உட்புறப்பாடும் நடந்தது. பஜார் தெருவில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவிலில், சிவனுக்கும், அம்பிகைக்கும் மாலை சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு, உற்சவர் உட்புறப்பாடு வந்தார். பெரியகுப்பம் ஆதிசோமேஸ்வரி உடனுறை அருணாசல ஈஸ்வரர் கோவிலில், 1,008 திருமுறை அர்ச்சனையும், திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வரர் கோவிலில், மாலை விநாயகர் சபையில் உள்ள விநாயகர்களுக்கும், சிவனுக்கும், அம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடைபெற்றன. கும்மிடிப்பூண்டி அடுத்த, மாதர்பாக்கத்தில் பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.