பதிவு செய்த நாள்
26
நவ
2014
12:11
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் கார் நிறுத்துமிடத்தில், வாகனங்களுக்குள் இருக்கும் நகைகள், பணம் தொடர்ந்து திருடப்பட்டு வருவதால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் ஜெ.ஜெ., நகரில் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான கார் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு தினமும் 200க்கு மேலான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த இடத்தின் வடக்கு பகுதியில் பாதுகாப்பு சுவர் இல்லாததால், பணியில் உள்ள காவலர்களையும் மீறி, பட்டப்பகலில் மர்ம நபர்கள் வெளியூர் பக்தர்களின் கார் கண்ணாடிகளை உடைத்து தங்க நகைகள், பணம், மொபைல் போன்களை திருடி செல்கின்றனர். வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கும் கோயில் நிர்வாகம், தொடர்ந்து நடக்கும் இத்திருட்டுகளை தடுக்க, கண்காணிப்பு கேமிரா பொருத்தவோ, சுற்றுச்சுவர் கட்டவோ அக்கறை காட்டாமல் இருந்து வருகிறது. இதனால், அந்த இடத்தில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு அச்சப்பட்டு, தனியார் வாகன நிறுத்தும் இடம், லாட்ஜ்களை தேடி செல்கின்றனர். தொடர் திருட்டுகளை காரணம் காட்டி, கார் நிறுத்தும் இடத்தை தனியாருக்கு ஏலம் விட கோயில் நிர்வாகம் முயற்சித்து வருவதாக, இந்து அமைப்பினர், பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:கார் நிறுத்தும் இடத்தை சுற்றி 8 நவீன கேமிராக்கள் பொருத்தி, வடக்கில் தற்காலிக முள்கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது. மேலும், அந்த இடத்தில் புறக்காவல் நிலையம் திறக்கவும், கூடுதல் "செக்யூரிட்டி களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்தவும் திட்டம் உள்ளது, என்றார்.