பதிவு செய்த நாள்
26
நவ
2014
02:11
கார்த்திகை பிறந்து விட்டால் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா! சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் எதிரொலிக்கத் தொடங்கி விடும். சாஸ்தா வேறு. ஐயப்பன் வேறு. முதலில் சாஸ்தாவைத் தரிசித்து விட்டு, பிறகு ஐயப்பனைத் தரிசிக்கலாம்.சிவனுக்கும், மோகினியாக வந்த மகாவிஷ்ணுவிற்கும் பிள்ளையாக அவதரித்தவரே சாஸ்தா. சாஸ்தாவிற்கு அடுத்த அவதாரமாக ஐயப்பன் தோன்றினார்.சாஸ்தாவின் வாகனம் யானை. ஐயப்பனின் வாகனம் புலி. சாஸ்தா ஏன் ஐயப்பனாக வரவேண்டும்? ஒரு சமயம்... சாஸ்தா சிவனுடன் கைலாயத்தில் இருந்தபோது, நேபாளத்தை பளிஞன் என்பவன் ஆண்டு வந்தான். காளி பக்தனான அவன் மந்திர, தந்திரங்களில் தேர்ச்சி பெற்றிருந்தான். பதவி, பணம் என எல்லாம் இருந்தும் முதுமை அவனை வாட்டியது. அதில்இருந்து விடுபடுவதற்காக கன்னி ஒருத்தியை காளிக்குப் பலியிட தீர்மானித்தான். அதை அறிந்த அந்தப் பெண், எமனை சம்ஹாரம் செய்த சிவனே! என்னையும் காப்பாற்று. இந்த மன்னரையும் காப்பாற்று! என்று கதறினாள்.சிவன் சாஸ்தாவிடம், உன் பெயருக்கேற்ப தர்மத்தை நிலைநாட்டி அவளைக் காத்தருள்வாயாக! என்றார். சாஸ்தா என்றாலே தர்மசீலர். இதனால் தான் அவரை தர்ம சாஸ்தா என்கிறோம்.சாஸ்தாவும் நேபாள மன்னருக்கு அறிவுரை கூறி தவறை உணரச் செய்தார். கன்னிப்பெண் விடுதலையானாள்.பின் மன்னர் சாஸ்தாவிடம்,அடியேனுக்கு நல்லறிவு புகட்டிய தாங்கள் என் மகளை மணந்தருள வேண்டும் எனவேண்டினார். சாஸ்தாவும் அவளை மணந்தார். காலங்கள் கடந்தன. அப்போது....வஞ்சி நகரான கேரளப்பகுதியை பிஞ்சகன் என்பவர் ஆண்டு வந்தார். ஒருநாள்....வேட்டையாடப் போன இடத்தில் தனியாளாக சிக்கிக் கொண்டார். பூதங்கள் அவரைச் சூழ்ந்து கொண்டன. பயத்தில் அவர்,பூதநாதா! சாஸ்தா! என்னைக் காப்பாற்று! எனகதறினார். அப்போது அங்கு வந்த சாஸ்தா பூதங்களை விரட்டி, மன்னரை அரண்மனைக்கு அழைத்து வந்தார்.வஞ்சி மன்னரான பிஞ்சகன், தர்மவடிவான சாஸ்தாவே! என்னைக் காப்பாற்றிய தாங்கள் என் மகள் பூரணையை ஏற்று அருள்புரிய வேண்டும் என வேண்டினார்.
அதன்படி, தர்மசாஸ்தா, பூரணை திருமணம் நடந்தேறியது. இந்த தகவல்... நேபாள மன்னரை எட்டியது. கோபத்தில் அவர், சாஸ்தாவே! என் மகளைமறந்து விட்டு இன்னொருத்தியை மணந்த நீ பூலோகம் போய் 12 ஆண்டுகள் பிரம்மச்சாரியாக வாழக் கடவது என சபித்தார். சாஸ்தா சிரித்த படி,மன்னா! நான் ஒரு தேவ காரியமாக பூலோகத்தில் 12 ஆண்டு மனிதனாக இருக்க வேண்டும். அதற்கு இந்த சாபம் உதவியாக இருக்கும். அப்போது நீங்களும் பந்தள நாட்டு மன்னர் ராஜசேகரன் என்ற பெயரில் பிறப்பீர்கள். அப்போது நானே உங்களுக்கு மகனாக வந்து அவதரிப்பேன் என்றார். இதன் பிறகே தர்ம சாஸ்தா ஐயப்பனாக பூவுலகில் அவதரித்தார்.சாஸ்தா என்ற சொல்லுக்கு,பாதுகாப்பவர் என்றும், கூட்டமாக வந்து வழிபடப்படுபவர் என்றும் பொருள் உண்டு. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அருளும் சாஸ்தாவை நாளும் வணங்குவோம்.