பதிவு செய்த நாள்
27
நவ
2014
12:11
திருவண்ணாமலை:தீப திருவிழாவில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பவர்களுக்கு, தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் பரிசு வழங்கப்படுகிறது.திருவண்ணாமலை கலெக்டர் ஞானசேகரன் வெளியிட்ட அறிக்கை:கார்த்திகை தீப திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள், பூஜை பொருட்கள் மற்றும் பிற திண்டபண்டங்கள், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவற்றை, பிளாஸ்டிக் கவரில் எடுத்து வருகின்றனர். இவ்வாறு எடுத்து வரும் பிளாஸ்டிக் கவர்களை, கோவில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் விட்டு செல்கின்றனர்.இதை தவிர்ப்பதற்காக, கார்த்திகை மஹா தீப திருவிழாவிற்கு துணிப்பை, சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிற பைகளை எடுத்து வரும் பொதுமக்களுக்கு, அதிர்ஷ்ட முறையில் தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் வழங்கப்பட உள்ளன.
திண்டிவனம் சாலை கிரேஸ் மருத்துவமனை வாயில், சந்தைமேடு வாகன நிறுத்தம், அடி அண்ணாமலை, குபேரலிங்கம் அருகில் மற்றும் வேலூர் பிரிவு சாலை அண்ணா வளைவு என, ஐந்து இடங்களில், சிறப்பு பிளாஸ்டிக் தவிர்ப்பு மையம் அமைக்கப்பட உள்ளன.
பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும், ஒவ்வொரு துணிப்பை, சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சாக்கு பைகளை காண்பித்து, அதில், சீக்கிரம் அழியாத மையினால் மார்க் செய்யப்பட்டு, பின்பு வரிசை எண்ணுடன் கூடிய சீட்டினை பெற்று கொள்ள வேண்டும்.
ஐந்து இடங்களில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வழங்கப்படும் சீட்டுகளை சேர்த்து, கணினி முறையில் அதிர்ஷ்ட நபர் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு செய்யும் நபரின், சீட்டுக்குரிய வரிசை எண்ணை, கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறை, ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்படும். தேர்ந்தெடுக்கும் நபர்கள், தங்களிடம் உள்ள அதிர்ஷ்ட சீட்டினை காட்டி, பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள, சிறப்பு பரிசு வழங்கும் மையத்தில், ஒவ்வொரு நபருக்கும், இரண்டு கிராம் தங்கம் மற்றும், 10 கிராம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும்.டிசம்பர், 5ம் தேதி காலை 6 மணிக்கு துவங்கப்பட்டு, மறுநாள் 6ம் தேதி காலை, 6 மணி வரை தொடர்ச்சியாக, 24 மணி நேரத்தில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.