ஒருசமயம் சனிபகவான் விநாயகரை பிடிக்கச் சென்றார். விநாயகர் அவரிடம் பின்புறமாக கையைக்கட்டி, முதலில் அங்கிருக்கும் ஆஞ்சநேயரை பிடித்துவிட்டு, அதன்பின்பு என்னிடம் வா ! என்றார். சனீஸ்வரன் ஆஞ்சநேயரிடம் சென்றார். அவர் சனியை தூக்கி விநாயகரிடமே வீசி விட்டார். அதன்பின்பு சனீஸ்வரன், ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் இருக்குமிடத்தைக் கூட நெருங்குவதில்லை. இப்படி ஒரு கர்ணபரம்பரைக் கதையின் அடிப்படையில், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 5 கி.மீ. தூரத்தில் உள்ள மல்லியத்தில் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயருக்கும் அருகருகே சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விநாயகரை பரிபூரண காரியசித்தி விநாயகர் என்கின்றனர். இவருக்கும் பின்புறத்தில் தனிக்கோயிலில், ஆஞ்சநேயர் பர்வதமலையை கையில் தூக்கிய கோலத்தில் வடக்கு பார்த்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறத்திலும் இரண்டு விநாயகர் சிலைகள் உள்ளன. மகாலிங்க சுவாமிக்கு ஒரு சன்னதி இருக்கிறது. சனி தோஷம் உள்ளவர்கள் இவ்விருவரையும் வழிபட்டால் தோஷம் நீங்கப்பெறும் என்பது நம்பிக்கை. சனிப்பெயர்ச்சியின்போது இங்கு விசேஷ பூஜை நடக்கிறது.