பதிவு செய்த நாள்
01
டிச
2014
02:12
ஆலங்குடி: ஆலங்குடி அருகே, கோவிலூரில் சிதிலமடைந்து கிடக்கும் சிவன் கோவிலை சீரமைக்க வேண்டும், என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆலங்குடி அருகே கோவிலூரில், 800 ஆண்டுகளுக்கு முன் சேர மன்னர்களால் கட்டப்பட்ட சிவன்கோவில் உள்ளது. இங்கு, பாலபுரீஸ்வரர்- லோகநாயகி சமேதராக எழுந்தருளியுள்ளனர். இந்த கோவில், செங்கவளநாட்டைச் சேர்ந்த, ஏழு ஊர்களுக்கு சொந்தமானதாக கூறப்படுகிறது. இந்த ஊரை சுற்றியுள்ள, பல்வேறு கோவில் திருவிழாக்களின் போது, தேரில் வலம்வரும் உற்சவ மூர்த்திகள் இந்த கோவிலில் இருந்து தான், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பாதுகாப்பு கருதி, புதுக்கோட்டையில் ஸ்வாமி சிலைகள் வைக்கப்பட்டிருந்தாலும், இந்த கோவிலுக்கு கொண்டு வந்து பூஜைகள் செய்த பிறகே, அந்தந்த கோவில்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இத்தகைய சிறப்புடைய இந்த கோவில், இப்பொது மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. விநாயகர், முருகன், மாணிக்கவாசகர், நடராஜர் என மற்ற பரிவார தெழ்வங்களின் சன்னதிகள் முற்றிலும் சேதமடைந்து விட்டது. இந்நிலையிலும், இங்கு பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகிறது. எனவே, கோவிலூர் சிவன் கோவிலை சீரமைக்க, அரசு முன் வரவேண்டும், என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.