பதிவு செய்த நாள்
03
டிச
2014
11:12
சொரக்காய்பேட்டை: பாமா ருக்மணி உடனுறை வேணுகோபால சுவாமி கோவிலில், 18 ஆண்டுகளுக்கு பின், தற்போது நித்ய பூஜை துவங்கியுள்ளது. மார்கழி உற்சவம் நடத்த, கிராமவாசிகள் ஆதரவு கோரப்பட்டு உள்ளது. சொரக்காய்பேட்டை அடுத்த, மேலபூடி கிராமத்தின் மைப்பகுதியில் அமைந்துள்ளது, பாமா ருக்மணி உடனுறை வேணுகோபால சுவாமி கோவில். 400 ஆண்டு கள் பழமையான இந்த கோவிலில், கடந்த 1911ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
காரணம் என்ன?: இந்த தகவல், கோவில் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது. கார்வேட் நகர ராஜாக்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில் என்பதற்கான ஆதாரமாக, அவர்களின் முத்திரை கல்வெட்டு, கோவில் சுற்றுப்பிரகாரத்தில் தரையில் பதிக்கப்பட்டுள்ளது. நுாறாண்டுகளுக்கும் மேலாக, கும்பாபிஷேகம் நடத்தப்படாமலும், 18 ஆண்டுகளாக நித்திய பூஜை நடைபெறாமலும் பூட்டிக்கிடந்த கோவிலை, திருமலை திருப்பதி தேவஸ்தானம், கடந்த ஆண்டு தங்களின் பொறுப்பில் எடுத்து கொள்ள கிராமவாசிகளை அணுகியது. ஒரு சில காரணங்களால் அது நடக்கவில்லை.அதை தொடர்ந்து, திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றன.
மார்கழியில் உற்சவம்: இந்நிலையில், கிராமவாசிகளின் முயற்சியின் பேரில், தற்போது சனிக்கிழமைகளில் பஜனை நடத்தவும், நித்ய பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் மார்கழியில் உற்சவம் நடத்தவும், பகுதிவாசிகளின் ஆதரவு கோரப்பட்டுள்ளது.