பதிவு செய்த நாள்
03
டிச
2014
11:12
சபரிமலை: சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஐயப்ப சேவாசங்கத்தின் தொண்டர்கள் அன்னதானம் வழங்குவது உட்பட பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என நான்கு மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் செயல்பட்டு வரும் ஐயப்ப சேவா சங்கம் சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான சேவையை செய்து வருகிறது. சன்னிதானத்திலிருந்து மாளிகைப்புறம் செல்லும் பகுதியில் ஐயப்ப சேவா சங்கம் செயல்படுகிறது. நடை திறந்திருக்கும் எந்த நேரத்தில் சென்றாலும் இங்கு சாப்பிட ஏதாவது கிடைக்கும். காலையில் உப்புமா, பொங்கல், கஞ்சி, மதியம் சாப்பாடு கிடைக்கிறது. இரவு கஞ்சி கிடைக்கும். பக்தர்கள் வயிறார சாப்பிடலாம். பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் அரிசி, காய்கறியால் இந்த சேவை நடக்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து காய்கறி வருகிறது. சேவா சங்கம் பயன்படுத்தியது போக எஞ்சியுள்ள காய்கறிகள் தேவசம்போர்டு அன்னதானத்துக்கு வழங்கப்படுகிறது. மூன்று ’ஷிப்டு’களில் 40 சமையல் கலைஞர்கள் இடைவிடாது சமையல் பணியில் ஈடுபட்டுள்ளனர். சன்னிதானம் மட்டுமின்றி பம்பை, நிலக்கல் மற்றும் பக்தர்கள் வரும் பாதைகளிலும் சேவாசங்க அன்னதானம் நடக்கிறது. மேலும் பக்தர்களின் தாகம் தீர்க்க மூலிகைகள் கலந்து கொதிக்க வைத்த தண்ணீரை 24 மணி நேரமும் விநியோகம் செய்கின்றனர். சபரிமலை வரும் வாகனங்களின் பழுது நீக்கும் பணியையும் முன்னணி வாகன கம்பெனிகளுடன் இணைந்து இலவசமாக செய்கிறது. உதிரி பாகங்கள் தேவைப்பட்டால் அதற்கான தொகையை மட்டும் செலுத்தினால் போதும். இதுதவிர உடல் நலம் பாதிக்கப்பட்டோரை ஸ்டிரெச்சர் மூலம் மருத்துவமனை, பம்பைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கும் உதவுகிறது. சன்னிதானத்தில் யாராவது இறந்தால் அவர்கள் உடலை பம்பைக்கு கொண்டு சென்று சேர்க்கும் சேவையையும் செய்கிறது. இப்பணியில் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு பக்தசேவையில் ஈடுபட்டுள்ள ஐயப்ப சேவா சங்கத்துக்கு சன்னிதானத்தில் போதுமான இடவசதி இல்லை என, கேம்ப் அதிகாரி அப்பண்ணாசாமி, வரவேற்பு அதிகாரி பாலன் தெரிவித்தனர்.
போலீஸ் பாதபலம்: சபரிமலையில் நேற்று இரண்டு கால்கள் செயல் இழந்தாலும் ஐயப்பனை வணங்கும் ஆர்வத்தில் இருமுடி கட்டு ஏந்தி வந்த பக்தரை போலீசார் தூக்கி வந்து 18ம் படியருகே தேங்காய் உடைக்க உதவி செய்தனர்.